இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது [சந்திரயான் - 2] 22/07/2019

இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்....
Jul 22, 2019


சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுவதையொட்டி, இறுதிக் கட்டப் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிலாவில் இறங்கி ஆய்வு நடத்தும் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான முதல் முயற்சி கடந்த 15-ஆம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ராக்கெட்டில் கிரையோஜெனிக் எந்திரத்தின் ஹீலியம் வாயு குழாயின் வால்வில், மீக்குளிர் நிலையால் ஏற்பட்ட விரிசலால் கசிவு ஏற்பட்டது. ராக்கெட்டை பிரிக்காமல் அதில் கசிவு ஏற்பட்ட இடத்தை கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதனை அடைக்கும் பணிகள் மூன்று நாட்களாக நடைபெற்றன. இதையடுத்து இன்று மதியம் 2.43 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுமையடைந்துள்ளன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்றும், இனி கோளாறு ஏற்பட சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார். சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து 48 நாட்கள் பயணிக்கும் சந்திரயான் -2 விண்கலம், நிலாவை சென்றடைந்த பின்னர், அதிலிருந்து நிலாவில் தரையிறக்கும் விக்ரம் விண்கலம் பிரியும். விக்ரம் விண்கலம் நிலாவில் தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பின்னர், அதிலிருந்து நிலாவில் ஊர்ந்து சென்று ஆராயும் பிரக்யான் விண்கலம், நிலாவில் இறங்கி ஆராயும் பணியை தொடங்கும்.

விக்ரம், பிரக்யான் விண்கலங்கள் 14 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு தகவல்களை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இதே நேரத்தில் சந்திரயான் -2 விண்கலம் ஓராண்டு காலம் நிலாவை சுற்றி, சுற்றி வந்து ஆய்வில் ஈடுபடும். இந்த ஆய்வின் மூலம் நிலாவின் தென்துருவத்தில் தண்ணீர் உள்ளதா,வேறு என்னென்ன தனிமங்கள் உள்ளன, நிலாவின் தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட உள்ளன.

நிலாவில் விக்ரம், பிரக்யான் கலங்கள் திட்டமிட்டபடி தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின்னர் இது போன்ற ஆய்வில் ஈடுபட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019