மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்.. 23/07/2019
மேட்டூர் வந்தடைந்தது காவிரி நீர்..
Jul 23, 2019
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. பில்லிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 8 ஆயிரத்து 300 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், நேற்று அதிகாலை பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. இந்த தண்ணீர் இன்று காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. மேட்டூர் அணைக்கு, நேற்று 213 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனிடையே, பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment