கரூரில் மருத்துவ கல்லூரி 31/07/2019

கரூர் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Jul 31, 2019


கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் சுமார் 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுக் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூர் மாவாட்டம் காந்தி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

17.45 ஏக்கர் பரப்பில் 279 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 75.79 கோடி ரூபாய் மதிப்பில் 3.20 லட்சம் சதுர அடி பரப்பில் வகுப்பறைக் கட்டடங்களும், 122 கோடி ரூபாய் மதிப்பில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பில் மருத்துவமனைக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.

மாணவ மாணவியருக்கான தங்கும் விடுதி 71 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 800 படுக்கைவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏழாவது தளத்தில் 11 வகையான அறுவை சிகிச்சை அரங்குகளும், 200 பேர் அமரக்கூடிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி கட்டிடமானது ஆறு மாடிகளைக் கொண்டது. 150 மாணவர்கள் பயிலக் கூடிய வகையில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆறாவது தளத்தில் தேர்வு அறைகளும், ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கூட்டரங்கமும் கட்டப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தொடங்கி வைத்ததை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குத்துவிளக்கு ஏற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 360 டிகிரி கோணத்தில் சுழன்று ஸ்கேன் செய்யும் நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இந்த மருத்துவமனையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019