அடுத்து சூரியனை ஆராய ISRO திட்டம் 23/07/2019

சந்திரயான் 2-யை அடுத்து சூரியனை ஆராய இஸ்ரோ திட்டம்
Jul 22, 2019


சந்திரயான்-2- யை தொடர்ந்து அடுத்த ஆண்டில் சூரியனின் வெளிப்பரப்பை ஆராய விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி உள்ள இஸ்ரோ அடுத்த கட்டமாக சூரியனை ஆராயும் திட்டத்தில் கவனத்தை திருப்பி உள்ளது.

இதற்காக ஆதித்யா - எல்.1 என்ற செயற்கை கோளை அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூரியனின் வெளிப்பரப்பை ஆராய்வதே இந்த விண்கலம் அனுப்புவதின் நோக்கமாகும்.

சூரியனின் வெளிப்புறத்தை கரோனா என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். சூரியனின் மையத்தில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு விசிறி அடிக்கப்படும் வெப்ப அலைகள், அதன் வெளிவட்டத்தில் நின்று அனல் வீசி வருகின்றன. பல லட்சம் ஆண்டுகளாக தொடர்ந்து அனல் வீசி வரும் இந்த வெளிப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களால் பூமியில் சுற்றுச்சூழலும் மாறுகிறது.

இதனால் கரோனா பரப்பை ஆராய்வதன் மூலம், பூமியின் சுற்றுச்சூழல் மாறுபாட்டை இனம் காண முடியுமென இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.சூரிய இயற்பியலில், கரோனா பகுதி எப்படி அதிக அளவு வெப்பத்தினை பெறுகிறது என்பது இன்றளவும் விடை கிடைக்காத கேள்வியாக உள்ளது என இஸ்ரோ தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் சூரியனில் இருந்து வெளிவரும் துகள்களை பற்றிய ஆராய்ச்சி பணிகளிலும் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று வெள்ளி கிரகத்தை ஆராயவும் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் விண்கலத்தை அனுப்ப உள்ளதாகவும் சிவன் கூறியுள்ளார். 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019