State News 26/07/2019

4 ஆவது முறையாக கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்பு
Jul 26, 2019


கர்நாடக மாநில முதலமைச்சராக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

கர்நாட மாநிலத்தில் குமராசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 23 ஆம் தேதி அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி மேற்கொண்டது. காலையில் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்த தை அடுத்து, உடனடியாக பதவி ஏற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாலை 5 மணி அளவில் தமது வீட்டில் இருந்து புறப்பட்ட எடியூரப்பா, பா.ஜ.க தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கட்சி முன்னணியினருடன் சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் உள்ள கடு மல்லேஸ்வரா கோவிலில் அவர் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டார்.

இதன் பின்னர் தொண்டர்கள் புடைசூழ அவர், ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு நடைபெற்ற விழாவில் எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முன்னதாக கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய எடியூரப்பா, பா.ஜ.க. ஆட்சியில் பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்காது என்றார். அனைத்து கட்சியினரையும் அரவணைத்து ஆட்சி செலுத்தவே தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

முதலமைச்சராக எடியூரப்பா மட்டுமே பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அமைச்சர்கள் யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இதனிடையே சட்டப்பேரவையில் ஏழு நாட்களுக்குள் அறுதி பெரும்பான்மையை நிரூப்பிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே வருகிற திங்கட்கிழமை அன்று எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமைச்சரவை குறித்து கட்சித் தலைவர் அமித் ஷாவுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

76 வயதான எடியூரப்பா, 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி முதன் முதலில் கர்நாடக மாநில முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். ஆனால் அப்போது கூட்டணியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவை வாபஸ் பெற்றதால், அந்த மாதம் 19 ஆம் தேதியே அவர் பதவியை துறந்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க பெரும் வெற்றி பெற்றதை அடுத்து 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி எடியூரப்பா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளால் அவர் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி பதவி விலகினார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 105 தொகுதிகளில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்த தால், எடியூரப்பா 2018-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். ஆனால் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் 19 ஆம் தேதியை பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் நான்காவது முறையாக மீண்டும் பொறுப்பு ஏற்று உள்ளார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019