அசாமில் பரபரப்பு..... 01/09/2019


தேசிய குடிமக்கள் பதிவேடு - அசாமில் பரபரப்பு....
Aug 31, 2019


அசாமில் இறுதிசெய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் சட்டபூர்வ இந்தியக் குடிமக்களாக ஏற்கப்பட்டுள்ளனர். அசாமில் வசித்து வரும் 19 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படாததால், அவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

ஒரு நாட்டின் சட்டபூர்வ குடிமக்களை உறுதிப்படுத்தவும், வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளங் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அசாமை பொறுத்தவரை, வங்கதேச எல்லையில் அமைந்திருப்பதால், அந்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏராளமானோர் குடியேறிவிடுகின்றனர்.

இந்நிலையில், அசாமில் வசிக்கும் சட்டபூர்வ இந்திய குடிமக்களை அடையாளம் காணவும், அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வந்த சட்ட விரோத குடியேறிகளை கண்டறிந்து அகற்றவும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு முதன் முதலில் 1951ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் நுழைந்தவர்களை கண்டறிவதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேசிய மக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக, விண்ணப்பங்கள் 2015ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தொடங்கி, அந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பெறப்பட்டன. 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில், 2 கோடியே 89 லட்சத்து 83 ஆயிரத்து 677 பேர் சேர்க்கப்பட்டனர். அப்போது 40 லட்சத்து 70 ஆயிரத்து 707 பேர் இடம்பெறவில்லை.

கடந்த ஜூன் 26ஆம் தேதி இரண்டாவது முறையாக வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபோது, தகுதியற்றவர்கள் என மேலும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 462 பேர் நீக்கப்பட்டனர். ஆக, கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதியும், கடந்த ஜூன் 26ஆம் தேதியும் வரைவு பதிவேடு வெளியிடப்பட்டபோது, 41 லட்சத்து 10 ஆயிரத்து 169 பேர் இடம்பெறவில்லை. அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெற்றிருப்பது, 1971ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாக்காளர் பட்டியல்களில் பெயர் இடம்பெற்றிருப்பது ஆகியவை சட்டபூர்வ ஆவணங்களாக ஏற்கப்பட்டன. இந்த அடிப்படையில், குறைந்த பட்சம் 10 முதல் 12 லட்சம் பேரும், அதிகபட்சமாக 20 முதல் 22 லட்சம் பேரும் இறுதி பட்டியலில் இடம்பெறாமல் போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மொத்தம் ஆயிரத்து 220 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 5 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று, இறுதி செய்யப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் சட்டபூர்வ இந்திய குடிமக்களாக இடம்பெற்றுள்ளனர். அசாமில் தற்போது வசிக்கும் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் இடம்பெறவில்லை.

அசாமில் இன்று வெளியிடப்பட்டிருப்பது இறுதி செய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு என்றாலும், அதில் சேர்க்கப்படாத, 19 லட்சம் பேருக்கும் மேல்முறையீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா (Prateek Hajela) தெரிவித்துள்ளார். அசாமில் அமைக்கப்பட்டுள்ள, வெளிநாட்டவர் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் 120 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

ஏற்கெனவே 100 வெளிநாட்டவர் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அசாமில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஒரு வார காலத்திற்குள் மேலும் 200 மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட உள்ளன. படிப்படியாக மொத்தம் 1000 தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவை மேல்முறையீடுகளை விசாரித்து, அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கும். அதன் பிறகும் உயர்நீதிமன்றத்திற்கோ உச்சநீதிமன்றத்திற்கோ செல்வதற்கான சட்டபூர்வ வாய்ப்புகள் உள்ளன.

இந்த சட்டபூர்வ வாய்ப்புகள் முடியும் வரை, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் வெளிநாட்டவர்கள் என அறிவிக்கப்பட மாட்டார்கள். பதிவேடு விவரங்களை www.nrcassam.nic.in தெரிந்து கொள்ளலாம்.

பட்டியல் வெளியானவுடனே, ஒரே நேரத்தில் கோடிக் கணக்கானோர் பார்க்க முயன்றதால் அந்த இணைய தளம் செயலிழந்தது. தங்களது பெயர்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதா என்பதைப் பார்க்க, என்ஆர்சி சேவை மையங்களிலும் மக்கள் திரண்டனர்.

தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்படுவதை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, அசாமில் பாதுகாப்பிற்காக ஆயிரக் கணக்கான துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டனர். இதேபோல மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019