கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதிற்கான காரணம் 25/08/2019

கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறிய காரணத்தை உறுதிசெய்த தேசிய கடல் ஆராய்ச்சி மையம்
Aug 25, 2019


சென்னை சுற்றுவட்டாரக் கடலோரங்களில் ஒளி உமிழும் உயிரினங்கள் அதிகரித்ததை அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சென்னை திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து அதனைக் காண மக்கள் ஆர்வத்துடன் கடற்கரைகளுக்குப் படையெடுத்தனர்.

இதையடுத்து தேசிய கடல் ஆராய்ச்சி மைய அறிவியலாளர்கள் சென்னை நகரின் பல்வேறு கடல் பகுதிகளில் இருந்து நீர் மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் குறிப்பிட்ட அந்த 2 நாட்களில் ஒளியுமிழும் நுண்ணுயிரிகள் கடற்பரப்பில் அதிகரித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்டிலுகா சைன்ட்டில்லன்ஸ் ((Noctiluca Scintillans)) எனப்படும் இந்த நுண்ணுயிரிகள், சுற்றுப்புற சூழல் உள்ளிட்டவற்றால் பாதிப்புக்குள்ளாக்கப்படும் போது ஒளியுமிழும் தன்மை உடையவை என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பயோலுமினசென்ஸ் ஆர்கானிசம் ((bioluminescence Organism)) எனப்படும் ஒளியுமிழும் உயிரினங்களால் ஏற்படும் இத்தகைய கடற்பரப்பு மாற்றங்கள் உலக அளவில் இயல்பானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆய்வு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நச்சுத் தன்மை அதிகரிப்பு தொடர்பாக தாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

அண்மையில் பெய்த மழையால் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் உப்புத் தன்மை குறைந்தது, கடலில் கலக்கும் கழிவு நீர் மூலக்கூறுகளில் இருந்து இந்த நுண்ணுயிரிகள் வளர்வதற்கான சத்துக்கள் கிடைத்தது உள்ளிட்டவை அவை வளர்ந்ததற்கான காரணமாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் இந்த நுண்ணுயிரிகள் ஈஞ்சம்பாக்கம் முதல் திருவான்மியூர் வரையும் பின்னர் எலியட்ஸ் கடற்கரை முதல் பெசன்ட்நகர் கடற்கரை வரை நகர்ந்தததாகவும் , அவை 240 மைக்ரோ மீட்டர் முதல் 300 மைக்ரோ மீட்டர் வரை வளர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18-ஆம் தேதி கடலில் ஒளி உமிழும் தன்மை ஏற்பட்ட போது பல இடங்களில் நச்சு கடற்பூண்டுகள் காணப்பட்டது செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அப்போது நைட்ரேட், பாஸ்பேட் ஆகிய வேதிப் பொருட்களின் தன்மை அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கடல் நீரில் கழிவுகளும் நைட்ரஜன் சார்ந்த நச்சுச் சத்துகளும் அதிகரிக்கும் போது நச்சு கடற்பூண்டுகள் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019