முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் 25/08/2019
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
Aug 24, 2019
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, உடல்நலக்குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலாமனார். அவருக்கு வயது 66.
2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு மே மாதம் வரை மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தவர் அருண்ஜேட்லி.
பழுத்த அரசியல்வாதியும், மூத்த வழக்கறிஞரும், மத்திய அமைச்சருமான அருண்ஜேட்லி, சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஜனவரியில் உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
இதனால் கடந்த மக்களவை தேர்தலில் அருண் ஜேட்லி போட்டியிடவில்லை. மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்தபோது, அருண்ஜேட்லி உடல்நலக்குறைவை காரணம் காட்டி மத்திய அமைச்சரவையில் இணையவில்லை. இந்நிலையில், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று பார்த்து வந்தனர். சுவாசக் கருவிகளின் உதவியுடன், 2 வாரங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அருண்ஜேட்லியின் உயிர், பகல் 12.07 மணிக்கு பிரிந்தது.
இந்நிலையில் அருண் ஜேட்லியின் மறைவுக்கு இந்திய ஹஜ் சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆலமரமாய், ஆணி வேராய் இருந்து செயல்பட்டவர் ஜேட்லி என்றும், சிறுபான்மை மக்களின் குறை தீர்ப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment