தக்காளியை சாலையில் கொட்ட தேவையில்லை...! 27/08/2019
இனி தக்காளியை சாலையில் கொட்ட தேவையில்லை..! பதப்படுத்த புதிய வாகனம்..!
Aug 27, 2019
தக்காளி , மாம்பழம் மற்றும் காய்கறிகள் விலை குறைந்து அதனை குப்பையில் வீணாக வீசும் நிலை ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு விவசாயிகளின் தோட்டத்திற்கே சென்று அவற்றை பதப்படுத்தி மதிப்பு கூட்டு பொருளாக மாற்றிக்கொடுக்கும் வசதி கொண்ட 5 வாகனங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தக்காளி ஜாம் ஆகும் விதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
தக்காளி....! ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் இந்த சத்துமிக்க பழம் விளைச்சல் அமோகமான நேரங்களில் மவுசு குறைந்து .... விலை கேட்க ஆள் இன்றி வீதியில் வீசப்பட்டுவிடுவது காலம் காலமாக தொடர்ந்து வந்த சோகம்..!
கடந்த காலங்களில் தக்காளியை பறித்து சந்தைக்கு ஏற்றிச்செல்லும் வண்டிக்கு வாடகை கொடுப்பதற்கு கூட முடியாமல் விவசாயிகள், தாங்கள் விளைவித்த தக்காளியை மாட்டுக்கு இரையாக சாலையில் வீசிவிட்டு சென்றனர்..! இந்த நிலையை மாற்ற தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி மத்திய அரசின் உணவுபதப்படுத்தும் அமைச்சகத்தின் கீழ் தஞ்சையில் இயக்கிவரும் இந்திய உணவு பதன தொழில் நுட்ப கழகம், பழங்கள் மற்றும் காய்கறிகளை நவீன முறையில் பதப்படுத்திக் கொடுக்கும் வசதி கொண்ட 5 வாகனங்களை வடிவமைத்து தமிழக அரசிடம் வழங்கியுள்ளது. இந்த 5 வாகனங்களையும் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தோட்டக்கலைத்துறை மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இதன்படி தக்காளி அமோக விளைச்சல் காலங்களில் மட்டுமல்லாமல், விலை குறைந்த காலங்களிலும் தக்காளியை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தயாரித்து வழங்க முடியும். அதாவது தக்காளியை இந்த வாகனத்தில் கொட்டினால் அது தக்காளியை கழுவி சுத்தம் செய்து, அவற்றை வேகவைத்து, அறைத்து கூழாக்கி அதனை மீண்டும் குறிப்பிட்ட வெப்ப நிலையில் சூடாக்கி பக்குவமாக குளிர்வித்து கண்டெய்னர்களில் அடைத்து கொடுத்து விடுகிறது .
இந்த தக்காளி கூழ், மூலப்பொருளை வைத்து ஜாஸ், ஜாம், போன்ற மதிப்பு கூட்ட பொருள் செய்யமுடியும். இதன்மூலம் ஒரு கிலோ 2 ரூபாய் மதிப்பு கொண்ட தக்காளியை 38 ரூபாய் மதிப்புள்ள ஜாமாக மாற்ற இயலும். விலைக்கு கேட்க ஆளில்லை என்று விவசாயிகள் இனி தக்காளியை வீணாக வீதியில் கொட்டவேண்டியது இல்லை. அது போலவே மிளகாய், மாம்பழம், உள்ளிட்ட அனைத்து பழம் மற்றும் காய்கறிகளையும் பதப்படுத்தி வழங்க முடியும் என்கின்றனர் வேளாண் துறை அதிகாரிகள்.
தமிழகத்தில் தக்காளி மற்றும் மாம்பழ விளைச்சலில் முன்னணியில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு வாகனமும், தஞ்சை மாவட்டத்துக்கு ஒரு வாகனமும், தமிழகத்தில் தேவையுள்ள மற்ற மாவட்டங்களுக்கு எடுத்து செல்லும் அனுமதியுடன் தோட்டக்கலைதுறைக்கு ஒன்று என்றும் இந்த 5 பதப்படுத்தும் வாகனங்களும் பிரித்து அனுப்பபட்டுள்ளன.
இந்த பதப்படுத்தும் வாகனங்கள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதப்படுத்துவதற்கு என்று நிரந்தரமாக ஒரு இடம் அமைக்கப்பட்டால், அந்த இடத்திற்கு வாடகை செலுத்தி பொருளை எடுத்து செல்லவேண்டும் , அதற்கான வசதி பெரும்பாலான விவசாயிகளிடம் இருப்பதில்லை..!
விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து பொருள் இருக்கும் இடம் தேடி வந்து, பழம் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி தரும் இந்த மொபைல் தொழில் நுட்பம் கைகொடுத்தால் தமிழகம் முழுவதும் இது போன்ற நவீன வசதி கொண்ட பதப்படுத்தும் வாகனங்கள் கூடுதலாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. விவசாயிகளின் கண்ணீர் துடைக்க தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது..!
Comments
Post a Comment