உடல் நலத்தை பேண ஃபிட் இந்தியா இயக்கம் 29/08/2019
இந்தியர்கள் உடல் நலனை பேண ஃபிட் இந்தியா இயக்கம்
Aug 29, 2019
ஆரோக்கிய வாழ்க்கைக்காக உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவற்றை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றும் நோக்கத்துடன் "ஃபிட் இந்தியா" இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா இயக்கத்தைப் போல, "ஃபிட் இந்தியா" இயக்கத்திற்கும் மக்கள் பேராதரவு தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"ஹாக்கி மந்திரவாதி" என போற்றப்பட்ட, மாபெரும் ஹாக்கி வீரரான தயான்சந்த், பிறந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கி வைக்கப்படும் என பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடியுடன், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், விளையாட்டு, உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் தற்காப்பு கலைகள் மேடையில் நிகழ்த்திக் காட்டப்பட்டன. மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும், தூய்மை இந்தியா இயக்கத்தை போல, ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு அனைவரும் பேராதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மாபெரும் விளையாட்டு வீரரான தயான்சந்த் பிறந்த நாளில் ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கப்படுவதை சுட்டிக்காட்டிய மோடி, தன்னுடைய உடல் தகுதி, வலிமை, ஹாக்கி மட்டையின் மூலம் உலகை அதிசயிக்கச் செய்தவர் தயான்சந்த் என்று குறிப்பிட்டார். விளையாட்டும், உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்ட மோடி, ஃபிட் இந்தியா இயக்கம் என்பது விளையாட்டு என்பதையும் தாண்டி நமது வாழ்க்கையின் முக்கியமான அங்கம் என தெரிவித்தார்.
தொழில்நுட்பங்களின் வரவினால் உடல்சார்ந்த செயல்பாடுகள் குறைந்துபோனதை சுட்டிக்காட்டிய பிரதமர், சில பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட, சாதாரண மனிதரின் வாழ்வின் உடல் உழைப்பு என்பது இயல்பானதாக இருந்தது என்றார். உடல்தகுதி என்பது நமது அன்றாட வாழ்வின் அங்ககமாக இருந்த நிலை மாறி, உடல்தகுதி என்பதன் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாக வேதனை தெரிவித்தார். நடை, அசைவு உள்ளிட்ட உடல்செயல்பாடுகளை காட்டும் ஆப்களும், கைகளில் அணிந்து கொள்ளும் ஃபிட்னஸ் பேண்டுகளும் இன்று பயன்பாட்டில் உள்ளன என்றாலும், அவற்றை முறையாக யாரும் கண்காணிப்பதில்லை என்றார். அடிக்கடி நடந்து செல்வது, சைக்கிளில் செல்வது என்றிருந்த நிலை மாறி, தொழில்நுட்பங்களின் வரவினால் உடல்செயல்பாடுகள் குறைந்துபோய்விட்ட என்றும் அவர் குறிப்பிட்டார். சர்க்கரை, உயர் ரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறார்களுக்கு கூட சர்க்கரை நோய் இருப்பதை கேள்விப்பட முடிகிறது என்றும் பிரதமர் வேதனையோடு குறிப்பிட்டார்.
50, 60 வயதுக்குப் பிறகுதான் மாரடைப்பு வரக்கூடிய அபாயம் உண்டு என்று சொல்லும் நிலைபோய், 35, 40 வயதில்கூட இத்தகைய அபாயம் இருப்பது கவலைக்குரியது என்றும் அவர் கூறினார். வாழ்க்கை முறையின் ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்கள், இத்தகைய நோய்களுக்கு வித்திடுகின்றன என்றும், வாழ்க்கை முறையை ஒழுங்கமைப்பதன் மூலம் இந்த நிலையை மாற்றலாம் என்றும் மோடி அறிவுறுத்தினார். வாழ்க்கையில் முறையில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலமே சில நோய்கள் வராமல் தடுத்துவிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய வளர்ச்சியில் உடல்நலத்திற்கும் பங்கு இருப்பதையும் பிரதமர் உதாரணங்களோடு சுட்டிக்காட்டினார். வெற்றிக்கு லிஃப்ட என ஏதும் இல்லை என்றும், படிகட்டுகள் வழியாகத்தான் ஏறிச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு, உடல்தகுதியும் ஆரோக்கியமும் அவசியம் என தெரிவித்த பிரதமர், நிறுவனங்களோ திரையுலகோ எதுவாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருப்பவரே சிகரம் தொடுபவராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
ஆரோக்கிய வாழ்வையும், உடல் தகுதியையும் வாழ்வின் மந்திரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஃபிட் இந்தியா இயக்கம் என்பது, உடற்பயிற்சியையும், விளையாட்டுகளையும் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இளையவர்கள், முதியவர்கள், பெண்கள், சிறார்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஆர்வமூட்டக்கூடிய இயக்கம் என்றும் பிரதமர் கூறினார். பல்வேறு விளையாட்டு வீரர்கள், நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள், கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான கவுதம் காம்பீர் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.
விளையாட்டுத் துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 11 அமைச்சகங்கள், ஃபிட் இந்தியா இயக்கத்திற்காக இணைந்து செயல்பட உள்ளன. விளையாட்டு வீரர்கள், திரையுலகினர், தொழில்துறையினர் என பல தரப்பினரும் ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment