விவசாயிகள் பயன்பாட்டிற்காக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் 26/08/2019

தக்காளியை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டிய பொருள் தயாரிக்கும் இயந்திரங்கள்
Aug 26, 2019


தக்காளியை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்ட 5 வாகனங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண் துறை சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை மாவட்டங்களில் 1,198 ஹெக்டர் பரப்பளவில் சுமார் 5 லட்சத்து 35 ஆயிரத்து 273 மெட்ரிக் டன் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி அதிகமாக விளையும் பருவங்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, குறைந்த விலையில் விற்கக்கூடிய நிலைமை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, தக்காளியை பண்ணை அளவில் மதிப்புக் கூட்டி விற்பனை செய்து பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தக்காளியை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்ட 5 வாகனங்கள் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தால் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்ட நிதியின் கீழ், தலா 40 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 வாகனங்கள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் நேரடியாக விவசாயிகளின் தக்காளிப் பண்ணைக்கே எடுத்துச் செல்லப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் உள்ள பதப்படுத்தும் இயந்திரங்கள் மூலம், தக்காளியை மட்டுமல்லாது பப்பாளி, கொய்யா, திராட்சை மற்றும் மாம்பழம் ஆகிய பழங்களையும் பதப்படுத்தி, அதன் சாறுகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில், மூன்று வாகனங்கள் கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் மற்றும் தருமபுரி மாவட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.

ஒரு வாகனம் தஞ்சாவூர் டெல்டா பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

ஒரு வாகனம் தமிழ்நாட்டின் பிறமாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019