ஐ.நா பொதுச்சபை கூடுகிறது... 20/09/2019

ஐ.நா. பொதுச்சபை கூடுகிறது - அமெரிக்கா செல்கிறார் மோடி..
Sep 20, 2019


பிரதமர் மோடி, நாளை முதல் அமெரிக்காவில் ஒருவார காலம் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றவுள்ள மோடி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 22-ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நாளை பிற்பகல் அமெரிக்கா செல்லும் அவர், 22 ஆம் தேதி காலையில், அமெரிக்க எரிசக்தி துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். வட்டமேஜை மாநாடு போல நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது இந்தியாவில் எரிசக்தி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் எடுத்துக் கூறுவதோடு, தொழில் தொடங்க வருமாறும் அவர் அழைப்பு விடுக்க உள்ளார்.

இதன் பின்னர் அவர் ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி. அரங்கத்திற்கு செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து பங்கேற்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 50,000 பேர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சியின் இரண்டாம் பெரிய தலைவரான ஸ்டேனி கோயர் உள்பட குடியரசு மற்றும் ஜனநாயக கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.

இந்தியர்கள், அமெரிக்கர்கள் பங்கேற்கவுள்ள 90 நிமிட கலாச்சர நிகழ்ச்சியிலும் மோடியுடன் டிரம்ப் பங்கேற்கிறார். இதன் பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். 23-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி, நியூயார்க் நகருக்குச் செல்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனிநோ குட்ரெஸ் ஏற்பாடு செய்துள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கிலும் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதே போன்று பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து பன்னாட்டு தலைவர்களுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின கொண்டாட்டத்தை ஒட்டி வருகிற 24-ஆம் தேதி அன்று நியூயார்க் நகரில் இந்திய அரசு சார்பில் நடைபெறும் தலைமையின் முக்கியத்துவம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் நியூசிலாந்து, தென்கொரியா, சிங்கப்பூர் நாட்டு தலைவர்களும் மோடியுடன் பங்கேற்கிறார்கள்.

24-ஆம் தேதி அன்று பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

25-ஆம் தேதி அன்று, புளூம்பெர்க் சர்வதேச வர்த்தக அமைப்பின் கருத்தரங்கில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு சிறப்பரை ஆற்றுகிறார். இதன் பின்னர் இந்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர் மாநாட்டிலும் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

27-ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்த கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்புகிறார். இந்த பயணத்தின் போது,20 நாட்டுத் தலைவர்களை சந்திக்கும் மோடி, 22 மற்றும் 24-ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்புடன், இருமுறை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஒரே வாரத்தில் இரு நாட்டு தலைவர்களும் இருமுறை சந்திப்பது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019