வெங்காய விலை அதிகரித்துள்ளது 20/09/2019


கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை..!
Sep 20, 2019


வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லசல்காவோனில், நாட்டிலேயே மிகப்பெரிய மொத்தவிலை வெங்காய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் வெங்காயம் ஏற்றுமதி ஆகிறது.

இங்கு வெங்காயத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்தது. இது 4 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும். இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் குவிண்டால் விலை 4300 ரூபாயாக இருந்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 700 ரூபாய் விற்றதே மிக அதிகமாகும். கடந்த ஒரு வாரமாகவே விலை அதிகரித்து வந்த நிலையில்தான், லசல்காவோனில் நேற்று குவிண்டால் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் கிலோ 35 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது கிலோ 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தென் மாநிலங்களில் வெங்காய பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், விலை உயர்ந்திருப்பதாக வெங்காய சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மழையால் வெங்காயத்தின் வரத்தும் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் குவிண்டாலில் இருந்து 12 ஆயிரம் குவிண்டாலாக குறைந்திருப்பதாகவும், பயிராக உள்ள வெங்காயம் இன்னும் முதிராத நிலையில், அறுவடைக்கு மேலும் அவகாசம் தேவை என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெறும் 7 ஆயிரம் குவிண்டால் மட்டுமே வந்த நிலையில், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்னும் 15, 20 நாட்களில், தென் மாநிலங்களில் வெங்காய வரத்து அதிகரித்து நிலைமை சீரடையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதனிடயே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. டெல்லி ஆசாத்பூர் மண்டியில் மொத்த விலை கிலோ 46 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மழை காரணமாக தென் மாநிலங்களில் வெங்காய பயிர் பாதிக்கப்பட்டதே விலை உயர்வுக்கு காரணம் என ஆசாத்பூர் மண்டி வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே, சென்னையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதே விலை ஏற்றத்திற்கு காரணம் என்றும், ஓரிரு வாரங்களுக்கு முன்னால் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும் கோயம்பேடு மொத்த சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 50 வெங்காய லாரிகள் வரவேண்டிய நிலையில், தற்போது 25 லாரிகள் மட்டுமே வருவதால் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019