இன்று பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்துள்ளது 20/09/2019

பங்குச்சந்தையில் உயர்வு..!!
Sep 20, 2019


முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதம், 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக, பங்குச்சந்தைகளில் மிதமிஞ்சிய எழுச்சி ஏற்பட்டு, சென்செக்ஸ் ஆயிரத்து 921 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ஒரே நாளில் சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்தது.

கோவா தலைநகப் பானாஜியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 22 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இத்துடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் வரிகளை சேர்க்கும்போது, உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25.17 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்னர் 34.9 சதவீதமாக இருந்தது.

வேறு சலுகைகளோ, ஊக்கத் தொகைகளோ பெறவில்லை எனில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி தற்போது 22 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டு தொடங்கிய ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்தே, இந்த புதிய வரி விகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார். இதற்காக அவசரச் சட்டத்தின் மூலம், வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 22 சதவீத வரி அடுக்கில் வரும் நிறுவனங்கள், மேட் எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரியையும் செலுத்த வேண்டியதில்லை என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

சலுகைகள், ஊக்கத் தொகைகள் பெறும் நிறுவனங்களுக்கு மேட் எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, உற்பத்தித் துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு வரி விகிதம், 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேல்வரி, கூடுதல் வரிகளை சேர்க்கும்போது வரி விகிதம் 17.01 சதவீதமாக இருக்கும்.

இது முன்னர் 29.1 சதவீதமாக இருந்தது. பங்கு விற்பனைகள் மீதான மூலதன ஆதாயத்தின் மீது மேல் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மூலதன ஆதாயத்தின் மீதும், நிறுவனங்கள் பங்குகளை திரும்ப வாங்கும்போதும் சூப்பர் ரிச் வரி விதிக்கப்படாது என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்த அறிவிப்புகள், முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கார்ப்பரேட் வரி விகித குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளால், அரசு ஆண்டுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாயை விட்டுக்கொடுப்பதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இதனிடையே, மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பால், பங்குச்சந்தையில் மிதமிஞ்சிய உற்சாகம் ஏற்பட்டது. 400, 600, 800, ஆயிரம், ஆயிரத்து 200 என சென்செக்ஸ் கிடுகிடுவென உயர்ந்து ஒரு கட்டத்தில் 2000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. நிஃப்டியும் சுமார் 600 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி காணப்பட்டது. பங்கு முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பும் 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் ஆயிரத்து 921 புள்ளிகள் உயர்ந்து, 38 ஆயிரத்து 14 புள்ளிகளில் நிலைகொண்டது.

இதேபோல, வர்த்தக முடிவில், நிஃப்டி 569 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 274 புள்ளிகளில் நிலை கொண்டது. இது 5 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும். இது, 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019