இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு 25/09/2019

இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு விற்பனை..
Sep 25, 2019


இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மாதந்தோறும் 2 லட்சம் டன் சமையல் எரிவாயுவை சவுதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விநியோகம் விரைவில் சீர்படுத்தப்படும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது. ஆனால், இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் சமையல் எரிவாயுவின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். இதனால் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதையடுத்து இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியாவின் அவசர தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக இரண்டு சரக்கு கப்பலில் சமையல் எரிவாயுவை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது என்றார். இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுல்தான் அகமது அல் ஜாபருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019