நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை தீவிரம்... 30/09/2019
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை தீவிரம்...
Sep 30, 2019
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவி விடுவிக்கப்பட்ட நிலையில், இர்ஃபான் என்ற மாணவரின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கில், மாணவர் உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமும், தரகர் ஜோசப் என்பவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய போது, இன்னும் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
பாலாஜி, எஸ்.ஆர்.எம். மற்றும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி ஆகியோர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாகப் புகார் எழுந்தது.
அவர்களில், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்து வந்த பிரவீன் என்ற மாணவர், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்படவே, அவரையும் அவரது தந்தை சரவணன் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராகுல் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவரவே அவரையும், ராகுலின் தந்தை டேவிசும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆள் மாறாட்டப் புகார் கூறப்பட்ட அபிராமி என்ற மாணவியின் புகைப்படம் ஒத்துப்போனதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே பாலாஜி, சத்ய சாய் மற்றும் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருந்தது. இதை அடுத்து தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான கல்லூரி முதல்வர்களிடம் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் விசாரணை நடத்தினார்.
இதனிடையே ஆள் மாறாட்டப் புகாரில் தேடப்பட்டு வந்த தருமபுரி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இர்ஃபான் என்பவரின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஆள்மாறாட்டம் தொடர்பாக இர்ஃபான் மீதும் புகார் எழுந்தது. ஆனால் அவர் மொரிஷியஸ் தப்பி விட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது தந்தையான ஷஃபி என்ற மருத்துவரை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கைது செய்த சிபிசிஐடி போலீசார் தேனி அழைத்துச் சென்றனர்.
Comments
Post a Comment