2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்... 26/10/2019
அரசு மருத்துவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்...
Oct 26, 2019
தகுதிக் கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு மருத்துவர் பணியிடங்களை நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும், தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பவையே அரசு மருத்துவர்களின் கோரிக்கை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களான பின்னரும் அரசு தரப்பு உறுதியளித்தபடி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி, நெல்லை, கோவை உட்பட பல்வேறு பகுதிகளிலும், மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிப்பது பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் அழைப்பின்பேரில், அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பைச்சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் தலைமைச்செயலகம் சென்று சுகாதாரத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இதனால் மருத்துவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று நீடிக்கிறது. அவசர சிகிச்சை மற்றும் டெங்கு பிரிவுகளில் மட்டும் மருத்துவர்கள் பணியாற்றி வருவதால், புற நோயாளிகள் பிரிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அரசு மருத்துவர்கள் 5 பேர் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Post a Comment