புதிய சிக்கலில் இன்ஃபோசிஸ்.... 23/10/2019


புதிய சிக்கலில் இன்ஃபோசிஸ்?
Oct 22, 2019


இன்ஃபோசிஸ் சிஇஓ-வும், தலைமை நிதி அதிகாரியும் சேர்ந்து, லாபத்தை பெருக்கிக் காட்டுவதற்காக முறையற்ற வழிகளை கையாள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் அந்நிறுவன பங்குகள் 16 சதவீதம் அளவுக்கு சரிந்தன.

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், உலகில் பல்வேறு நாடுகளில் கிளைபரப்பியுள்ளது. அந்நிறுவன ஊழியர்கள் சிலர், "நெறிசார்ந்த ஊழியர்கள்" என்ற பெயரில், இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்திற்கும் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், சிஇஓ சலில் பரேக் மற்றும் சிஎஃப்ஓ நிலஞ்சன் ராய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். லாபத்தை பெருக்குவதற்கும், குறுகிய கால ஆதாயத்திற்காகவும் இருவரும் இணைந்து, கணக்குவழக்குகளில் முறையற்ற வழிகளை கையாள்வதாக அதில் புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை அளிக்க தயார் என்றும், இந்த புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த குழுவினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த புகார் குறித்து சுயேச்சையான விசாரணை நடத்தப்படும் என இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகனி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் இன்ஃபோசிஸ் பங்குகள் 16 சதவீதம் அளவுக்கு சரிந்தன. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மேலும் இந்த விவகாரம் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக்கூடும் என்றும், வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப சேவைத்துறையில் இருபெரும் நிறுவனங்களாக உள்ள டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ், கடினமான வர்த்தக சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த புகார் எழுந்துள்ளது. இதனிடையே, இன்ஃபோசிஸ் சுயேச்சை இயக்குநர்களான சுந்தரம் மற்றும் பிரகலாத் ஆகியோரை, தமது உரையாடல்களில் மதராஸிகள் என சிஇஓ சலில் பரேக் கூறியதாகவும், இதேபோல மற்றொரு சுயேச்சை இயக்குநர் கிரண் மஜூம்தார் ஷா-வை குறிப்பிடும்போது "பெரிய மகாராணி என நினைத்துக் கொள்பவர்" என்றும் அவர் கூறியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவை சேர்ந்தவர்களை மதிப்புக் குறைவாக குறிப்பிடும் வகையில் மதராஸி எனக் கூறும் வழக்கம் வடநாட்டவர்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019