இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது... 24/10/2019
"இடைத்தேர்தல் வெற்றி... உண்மைக்கு கிடைத்த வெற்றி" - முதலமைச்சர் பெருமிதம்...
Oct 24, 2019
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி, உண்மைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், இந்த வெற்றித் தொடரும் என்றும் கூறியிருக்கிறார்.
இரு தொகுதிகள் இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி முகம் கண்டதை அடுத்து, முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகை புரிந்தார். அங்கு, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு வரலாற்று வெற்றி என்றார்.
அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரின் உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும், வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், முதலமைச்சர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில், பொய்யான வாக்குறுதிகளை அளித்த திமுக வெற்றி பெற்றதாகவும், தற்போது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, உண்மைக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். 2021ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்கான முன்னோடி தேர்தல் இது என்றும், இந்த வெற்றித் தொடரும் என்றார்.
தர்மம் , நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பது இந்த வெற்றியின் மூலம் நிரூபனம் ஆகியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். செய்ய முடிவதை மட்டும் மக்களிடம் சொல்லுவோம், செய்ய முடியாததை மக்களிடம் சொல்ல மாட்டோம் என்றார்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால் அந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்கு முன் அதன் உண்மை தன்மை என்ன என்பதை அரசு ஆராயும் என்றும், முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், ஒரே நேரத்தில் 6 மருத்துவக்கல்லூரி அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், முதலமைச்சர் கூறினார்.
முதலமைச்சரின் செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், பாண்டியராஜன், பெஞ்சமின், சரோஜா, நிலோபர் கபில் மற்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஈ.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் உக்கி போட்டு முத்தமிழ்ச்செல்வன் வழிபாடு நடத்தினார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sup
ReplyDelete