நவகிரகங்களில் முதன்மையானவரான குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்... 29/10/2019
விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்தார் குருபகவான்..
Oct 29, 2019
நவகிரகங்களில் முதன்மையானவராக கருதப்படும் குருபகவா அதிகாலை 3. 49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தில் நவக்கிரங்களில் முதன்மையான சுப கிரகம் என அழைக்கப்பட்டு, நற்பலன்களை தரக்கூடிய கிரகமாக குருபகவான் பாவிக்கப்படுகிறார். குரு பகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அதன்படி குருபகவான் இன்று அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார். மேலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு தனது சொந்த இருப்பிடமான தனுசு ராசியை அடைவதால் இந்த குருபெயர்ச்சி கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதையொட்டி குருபரிகார தலமாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஆபத் சகாயேசுவரர் ஆலயத்தில் அதிகாலை சிறப்பு யாகம் நடைப்பெற்றது.
தொடர்ந்து குருபகவானுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து, தங்க கவசத்துடன் சிறப்பு அலங்காரம், மற்றும் தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள யோக ஞான தட்ஷிணாமூர்த்தி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, குருபகவானுக்கு ஹோமம், 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை செய்தும், பின்னர் பரிகார பூஜையில் பங்கேற்றும் வழிபாடு நடத்தினார்கள். இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சென்னை பாடியில் உள்ள பிரசித்திபெற்ற குருஸ்தலமாக விளங்கும் திருவலிதாயம் என்றழைக்கப்படும், அருள்மிகு ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர் கோவிலில், இன்று அதிகாலை 3.48 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது... 3 நாட்கள் நடைபெறும் லட்சார்ச்சனைக்குப்பின், வரும் 31 ந்தேதி வியாழக்கிழமையன்று காலை 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் குருபரிகார ஹோமம் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பட்டமங்கலம் அருள்மிகு தட்ஷணாமூர்த்தி ஆலயத்தில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிராமத்தில் உள்ள ஜலநாதீஸ்வரர் கிரிராஜா கன்னிகாம்பாள் ஆலயத்தில் குரு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயத்தில், தனி சன்னதியில் அமைந்துள்ள தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி அலங்காரம் நடைபெற்றது.
விழுப்புரம் கைலாசநாதர் திருக்கோவிலில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில், குருபகவானுக்கு பால் ,தயிர், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட 21 வகை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தூத்துக்குடியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள குருபகவான் சன்னதியில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது.
Comments
Post a Comment