BSNL தனியார் மயமாகாது.... 23/10/2019

BSNL தனியார் மயமாகாது.! மத்திய அரசு திட்டவட்டம்....
Oct 23, 2019


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தை, தனியார் மயமாக்கும் திட்டமில்லை என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையையும், மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம், அவரது அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள டெல்லி 7 லோக் கல்யாண் மார்க்கில் ((7 Lok Kalyan Marg)) நடைபெற்றது.

கேபினட் கூட்டத்திற்கு பின், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL ஒருபோதும் தனியார் மயமாக்கப்படமாட்டது என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு கைவிடப்படாது என்றும், உறுதிபடக் கூறினர்.

BSNL மற்றும் MTNL ஒருங்கே இணைக்கப்படும் என்றும், அதன் மறுசீரமைப்புக்காக 14,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மத்திய அரசு கூறியிருக்கிறது. 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை, BSNLக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு, கேபினட்-ன் நிர்வாக ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

BSNL-ல் பணியாற்றும் ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற விரும்பினால், அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கேபினட் ஒப்புதல் அளித்திருக்கிறது.

தலைநகர் டெல்லியில், அங்கீகாரமற்ற காலனிகளில் வசித்து வரும் 40 லட்சம் பேருக்கு, பட்டா வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ராபி பயிர்கள் எனப்படும் குறுவை சாகுபடி பயிர்களான கோதுமை, பார்லி, கடுகு உள்ளிட்டவற்றிற்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோதுமை மற்றும் பார்லிக்கு, குவிண்டாலுக்கு, தலா 85 ரூபாயும், கொண்டைக்கடலைக்கு குவிண்டாலுக்கு 255 ரூபாயும், மசூர் பருப்புக்கு குவிண்டாலுக்கு 325 ரூபாயும், கடுகு குவிண்டாலுக்கு 225 ரூபாயும் என, அவற்றிற்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க, கேபினட்டில் முடிவு செய்து ஒப்புதல் அளித்திருக்கிறது. 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019