டெல்லியில் சுவாசிக்கவே சிரமம்... 03/11/2019
அபாயக் கட்டத்தில் காற்று மாசு.. டெல்லியில் சுவாசிக்கவே சிரமம்...
Nov 03, 2019
டெல்லியில் காற்றுமாசு அபாயக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு தரையிறங்க இருந்த 37 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ள. அடர் புகைமூட்டதால் பொதுமக்கள் கண் எரிச்சலுக்கு ஆளான நிலையில் சுவாசிப்பதற்கு சிரமத்திற்கு உள்ளாகினர்.
தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளில் விவசாயக் கழிவுகளை எரிப்பதாலும் தலைநகர் டெல்லியில் காற்றுமாசுபாடு அபாயகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் நகரம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் கண் எரிச்சலுக்கு ஆளான நிலையில் சுவாசிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
நகரம் முழுவதும் வெளிச்சமின்றி கரும்புகைசூழ்ந்து காணப்பட்டதால் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி விமானத்துறை தெரிவித்துள்ளது. அதனால், காலை 9 மணியில் இருந்து பிற்பகல் ஒரு மணி வரையிலான நேரத்தில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் மற்றும் லக்னோவில் தரையிறங்க உத்தரவிடப்பட்டது.
இதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை காற்றுமாசு தரக்குறியீட்டில் கடுமையான அளவான 600புள்ளிகளை தாண்டியதால் பொதுசுகாதார அவசரநிலையை சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரியம் பிரகடனப்படுத்தியது. அதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 8ம் தேதிவரை விடுமுறை அளித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
அதுமட்டுமின்றி, பட்டாசுகள் வெடிக்கவும், குப்பைகளை எரிக்கவும், கல் உடைக்கவும், கட்டுமானம் மற்றும் நிலக்கரி எடுக்கும் பணிகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க வாகனங்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் செல்லும்படி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்றுமாசு தரக்குறியீட்டு அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்து 600 புள்ளிகளை காற்றுமாசு எட்டியுள்ளது. அபாயத்தை விளைவிக்கும் இந்த காற்றுமாசு ஜஹாங்கீர்புரியில் 1,690 புள்ளிகளும், டெல்லி விமான நிலையத்தில் 1,120 புள்ளிகளும், குருகிராமில் 990 புள்ளிகளும், நொய்டாவில் 1,974 புள்ளிகளும் பதிவாகியுள்ளன.
இது குறித்து பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவில் காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதுடன் அண்டை மாநிலங்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா காற்றின் மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
Comments
Post a Comment