சபரிமலையில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம்..! 17/11/2019

சபரிமலையில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம்..! 10 பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்...
Nov 17, 2019


சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை காவல்துறையினர் பம்பாவில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என்பது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

முந்தைய தீர்ப்பின்படி பெண்கள் சபரிமலைக்கு செல்ல தடையில்லை என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு அறிவித்தது. மண்டல பூஜைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை சபரிமலையின் நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமியே அய்யப்பா என்றவாறு திரண்டிருந்தனர்.

சாமி தரிசனம் செய்யவும், மண்டல மற்றும் மகர பூஜைக்காகவும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வரஉள்ளனர். இன்று காலை 5 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் ஏராளமான பெண்களும் சபரிமலை கோவிலுக்கு முன்பதிவு செய்துள்ளனர். ஆயினும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாது என்று கேரள அரசு தெரிவித்து சபரிமலை வருவதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து வந்த 10 பெண் பக்தர்கள் நேற்று பம்பாவில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.அந்தப் பெண்கள் சபரிமலைக்காக வரவில்லை என்றும் கோவில் கோவிலாக யாத்திரை மேற்கொண்டு வந்தனர் என்றும் சபரிமைலயில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று அறிந்து தாங்களாகவே திரும்பிச் சென்றனர் என்றும் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் PB Nooh செய்தியாளர்களிடம் விளக்கம்அளித்தார்.

இச்சம்பவத்தையடுத்து சபரிமைலை கோவிலுக்கான முதல் நுழைவுப் பகுதியான நிலக்கல் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரள அரசு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டிய புனேயைச் சேர்ந்த பெண்ணிய ஆர்வலர் திருப்தி தேசாய், பாதுகாப்பு இல்லாவிட்டாலும் தாம் நவம்பர் 20ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுவாமியே சரணம் ஐயப்பா கோஷ முழக்கங்களுடன் நூற்றுக்கணக்கானோர் மாலை அணிந்து கொண்டனர்.

ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதால், காவி, கறுப்பு நிற வேஷ்டிகள், துண்டுகள், துளசி மாலைகள், பூக்கள், பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியுள்ளது.


Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019