சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு... 05/12/2019

உலகத்தரத்திற்கு மெரினா கடற்கரை... சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு...
Dec 05, 2019


ஆறு மாதத்திற்குள் மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குப்படுத்துவது, நடைப்பாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மெரினா கடற்கரையில் ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், அதன்பின்னர் கடற்கரை பகுதியில் உள்ள மீன் கடைகள் ஒழங்குபடுத்தப்பட்டு மீன்சந்தைக்கு மாற்றப்படும் என்றும் அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரை வணிக தளம் இல்லை என்று கூறியதுடன் 6 மாதத்திற்குள் மெரினாவை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.அதற்காக மாநகராட்சிக்கு முழு சுதந்திரம் அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேபோல், சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள கடைகள் கடற்கரையின் அழகை மறைக்கும் வகையில் இருப்பதால் அவற்றை ஒழுங்குபடுத்தி கடற்கரையை நோக்கி நேர்நிலையாக அமைக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், லூப் சாலையில் மீன் சந்தை கட்டும்பணியின் போது கடற்கரை மீன் கடைகளை ஒழுங்குப்படுத்த அறிவுறுத்திய நீதிபதிகள் விதிகளை மீறுபவர்களை கட்டாயப்படுத்தி அகற்றவும் உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி, கடற்கரை பகுதியில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்றவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இறுதியாக கடற்கரை கடைகளை நேர்நிலையாக மாற்றி அமைப்பது குறித்தும், மெரினாவை தூய்மைப்படுத்துவது குறித்தும் டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இம்மாதம் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019